Saturday, 27 August 2011

ஹலோ, ஹவ் ஆர் யூ?

               நான் அன்றும் வழக்கம் போல் காலை ஆறு மணிக்கு வாக்கிங் செல்லக் கிளம்பினேன்.  பெசண்ட் நகர் பீச் பக்கம் ஒரு மணி நேரம் என் நண்பர்களோடு நடந்து விட்டு பின் கொஞ்ச நேரம் அன்னா ஹசாரே, 2 ஜி, புதிய சட்டசபை என்று ஹாட் டாப்பிக்கெல்லாம் அலசிவிட்டு மெதுவாக பஸ் ஸ்டாண்ட் வருவேன்.  அங்கே ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து அங்கு வரும் மக்களை வேடிக்கைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நீங்கள் ஊகிப்பது சரிதான், நான் ரிடையர்ட் லைஃபை அனுபவிக்கும் மிடில் க்ளாஸ் மஹாதேவன்.  நான் அரக்கப் பரக்க ஓடி வேலை செய்த காலத்தில் சக மனிதர்களைத் திரும்பிப் பார்க்கவே நேரமில்லை.  அதனால் இப்பொழுது பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து எல்லாரையும் வேடிக்கைப் பார்ப்பது, வழி கேட்பவர்களுக்கு வழி சொல்வது, பஸ் ஏறமுடியாமல் கஷ்டப்படும் சிறுவர்/ வயதானவர்களுக்கு உதவுவது  என்று பொழுது போக்குவேன். 

               பத்து நாட்களுக்கு முன் இப்படி வேடிக்கை பார்க்கும் போது ஒரு சுவையான நிகழ்ச்சி.  ஒரு இளைஞன்  back pack மாட்டிக் கொண்டு டீஸண்டான உடை போட்டுக் கொண்டு வந்தான்.  பஸ் ஸ்டாண்டில் இருப்பவர்களைப் பார்த்து ஸ்னேகமாக ஆனால் கொஞ்சம் கூச்சத்துடன் புன்னகைத்தான்.  ஒரு பத்து நிமிடம் கழித்து வடக்கத்திக்காரர் போல் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்து இவன் புன்னகைக்க அவர் இயந்திரத்தனமாக 'ஹலோ, ஹவ் ஆர் யூ?' என்றார்.  இவனோ ' ஐ அம் ராமசாமி' என்றான் கூச்சத்துடன். அந்த வடக்கத்திக்காரர் அவன் பதிலை லட்சியம் செய்யாமல் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு, பஸ் வருகிறதா என்று பார்ப்பதிலேயே கவனமாக இருந்தார்.  'என்னாடா இது, டீஸண்டா ட்ரெஸ் பண்ணியிருக்கான், இப்படி இங்லீஷ் பேசறானே' என்று எனக்கு ஆச்சர்யம். அடுத்த சில நிமிடங்களில் டிப்-டாப் ஆசாமியின் பஸ் வர அவன் போய்விட்டான்.

            அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த ஒரு பத்து நாட்களில் மூன்று முறை இந்த காட்சி நடந்தது.  எனக்கு அந்த டிப்-டாப் இளைஞனிடம் அனுதாபம் ஏற்பட்டது.  நாளை எப்படியும் அந்த இளைஞன் வந்தவுடன் அவனுக்கு இங்லீஷ் கற்க ஆர்வமிருந்தால் சொல்லிக் கொடுக்கத் தாயாரென்று சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.  ஆனால் என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் இரண்டு நாட்கள் வாக்கிங் போகமுடியவில்லை.  மறு நாள் வழக்கம் போல் பஸ் ஸ்டாண்டில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அந்த இளைஞன் வந்தான்.  கொஞ்ச நேர இடைவெளியில் அந்த வடக்கத்திக்காரரும் வந்தார்.  வழக்கம் போல் 'ஹவ் ஆர் யூ?' என்று சொல்ல டிப் டாப் இளைஞன் 'fine,thanks ' என்று தெளிவாகப் பேச எனக்கு ஒரே ஆச்சர்யம்.   அவனது பஸ் வர அவன் போய்விட்டான். 

             மாலை நான்கு மணியளவில் காய்கறி வாங்க மார்கெட் போயிருந்தேன்.  ஒரே கூட்டமாயிருக்க என்ன என்று விலக்கிப் பார்த்தால் அந்த டிப்-டாப் இளைஞனைப் போலீஸ் கைது செய்து கொண்டிருந்தார்கள்.  என்ன என்று விசாரிக்கையில் இரண்டு மூன்று இடங்களில் பாம் வைத்தான் என்று கைது செய்தார்களென்று சொல்லிக்கொண்டார்கள்.  எனக்கு ஒரே அதிர்ச்சி. அந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கு நண்பர் ஆதலால் அவர் மூலம் பின்னர் விஷயம் தெரிய வந்தது.  அந்த டிப்-டாப் ஆசாமியும் வடக்கத்திக்காரரும் கூட்டுக் களவாணிகள். ஹவ் ஆர் யூ? என்ற கேள்விக்கு ஐயம் ராமசாமி என்றால் பாம் தாயாரில்லை என்றும், ஐயம் ஃபைன் என்றால் தயார் என்றும் சங்கேத பாஷையில் பேசிக் கொண்டார்கள் என்றும் அறிந்தேன்.  எப்படி இவர்களைப் பிடித்தார்கள் என்று மேலும் ஆவலுடன் கேட்க 'அந்த இளைஞன் இப்படி தப்பாக இங்லீஷ் பேசுவதைப் பற்றி தன் மனைவியின் மூலம் கேள்விப்பட்ட கான்ஸ்டபிள் கேலியாக அதைப் பற்றி சொன்னதாகவும், அதில் ஏதோ தவறிருப்பதாக உள்மனது சொல்ல அவனைப் பின் தொடர்ந்து அவனைப் பற்றி தெரிந்துகொண்டார்களாம்.  அவனைக் கையும் களவுமாகப் பிடிக்கப் பொறுமையாகப் பின் தொடர்ந்து மார்கெட்டில் பாமை வைத்துவிட்டு செல்லும்போது கையும் களவுமாகப் பிடித்ததார்களாம்.

           மறுநாள் வழக்கம் போல் வாக்கிங் போகையில் என் நண்பர் 'ஹலோ ஹவ் ஆர் யூ?' என்று என்னைல் கேட்க அவசர அவசரமாக அவர் வாயை மூடினேன். 

(எங்கள் ப்ளாகில் வந்த அவன் இவன் அவர் பதிவைப் படித்தபோது தோன்றிய கதை இது.    நான் முதல் முதல் எழுதிய கதையும் எங்கள் ப்ளாகில் படித்த பதிவை ஒட்டியே எழுதப்பட்டது. எங்கள் ப்ளாகுக்கு ஒரு thanks.


14 comments:

ஸ்ரீராம். said...

நல்ல கற்பனை. வித்தியாசமான எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. படிப்பதையும் பார்ப்பதையும் டெவலப் செய்வதுதானே சிறுகதை முயற்சி? முன்னரே எழுதி வைத்து விட்டீர்களா...எங்கள் ப்ளாக்கில் அந்தப் பதிவு வந்து நீண்ட நாட்களாகி விட்டதே...!

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம். எங்கள் ப்ளாகில் படித்தபோது தோன்றியது; எழுத இப்பொழுதான் நேரம் கிடைத்தது.

கௌதமன் said...

Twist நன்றாக உள்ளது.

geetha santhanam said...

நன்றி KGG சார்.

meenakshi said...

நல்ல கற்பனை. என்னடா, கதை எங்கள் ப்ளாக்ல் வந்த ஒரு பதிவை நினவுபடுத்துகிறதே என்று எண்ணியபடியே படித்தேன். போக, போக நல்ல திருப்பம். கலக்கிடீங்க!

கதம்ப உணர்வுகள் said...

ஆஹா கீதா உங்கள் வலைப்பூ அழகாக க்ருஷ்ணர் படத்துடன் இருக்கிறதுப்பா...

என் மொபைலில் க்ருஷ்ணர் படம் தான் எப்பவும் வைத்திருப்பது. பழைய காலத்து ஆள்பா நான் :)

உங்கள் பதிவை படிச்சிட்டு தான் ஓடிவந்தேன் உங்க ப்ளாக்குக்கு....

ஹலோ ஹவ் ஆர் யூ? :) ஐ அம் மஞ்சு....

சும்மா தமாஷ்....

படிச்சேன்பா கதை.... நானும் மஹாதேவனை போலவே பரிதாபப்பட்டேன் அந்த பையன் மீது..

கடைசில பார்த்தால் ஐயோ இப்படி ஒரு நாசக்கார செயல் செய்ய இந்த பையனும் அந்த வடக்கத்திக்காரனும் என்ன ஒரு வில்லத்தனம்... நம்ம நாட்டை அழிக்க நம்ம மக்களுக்கே எப்படி மனசு வருகிறது? இதுல கோட் வர்ட் தாம்பா அசத்தல்...

இந்த கதை எழுதவைத்த இன்ஸ்பிரேஷன் எதுன்னு கூட கொடுத்திருந்தீங்க..

ஆனா எனக்கு படிச்சதுமே இந்த கதை பிடித்துவிட்டது.....

அன்பு வாழ்த்துகள் கீதா... ஒருவேளை என்னுடன் வேலை செய்யும் கீதாவா இருப்பீங்களோன்னு ஒரு குட்டியூண்டு டவுட் கூட இருக்கு :)

முடிந்தால் என் மெயில் ஐடிக்கு உங்க போன் நம்பர் தாங்கப்பா...

நான் கால் செய்கிறேன்....

என் ஆபிசு ஃபாஹாஹில்ல இருக்கு, வர்பா இன்சுரன்ஸ்... பாஸ்போர்ட் ஆபிசு பில்டிங் தாம்பா...

கண்டிப்பா பார்ப்போம் கீதா....

geetha santhanam said...

நன்றி மஞ்சுபாஷிணி & மீனாக்ஷி. மஞ்சுபாஷிணி, நான் உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன். குவைத்தில் ஒரு பதிவரைப் பற்றி தெரிந்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. கட்டாயம் நாம் தொலை/அலை பேசிவோம்.
மீனாக்ஷி, என்ன அப்பப்ப காணாம போயிடறீங்க?

அப்பாதுரை said...

ஹிஹி.
கல்லூரியில் வெங்கட்ராமன் என்று நெருங்கிய நண்பன். அவன் வீட்டில் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. 'என்னடா எழவெடுக்கிறியா?' என்று தான் குசலம் விசாரிப்பார் வெங்கட்ராமனின் அப்பா. அவர் அப்படி என்றால், வெங்கட்ராமனின் பாட்டி "வாடா, கட்டேலே போறவனே, ரொம்ப நாளா காணோமே?" என்பார் உள்ளே நுழைந்ததும்.

geetha santhanam said...

துரை, இப்படி ஒரு வரவேற்பா?விசாரிப்பா? அதுவும் வெங்கட்ராமன் பாட்டியிடமிருந்து!!

அப்பாதுரை said...

முதல் தடவை வெங்கட்ராமன் பாட்டி அப்படி சொன்னதும் என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தேன். என் பாட்டியாக இருந்தால் திரும்ப திட்டியிருப்பேன் என்று நினைத்த போது, வெங்கட்ராமன் சொன்னது: "ஆமா, நீ மட்டும் என்ன பல்லாக்குலயா போறே?". அன்றிலிருந்து பாட்டி என்னை வரவேற்கும் போதெல்லாம் நானும் பதிலுக்கு "நீங்க என்ன பல்லாக்குலயா போவீங்க பாட்டி?" என்பேன். உடனே அவர் சந்தோஷமாக "சரி, வந்து கொட்டிக்கோ தண்டச்சோறு" என்று எங்கள் இருவருக்கும் ஏதாவது டிபன் சில சமயம் சாப்பாடு போடுவார்.

meenakshi said...

பின்னூட்டம் எழுத நேரமில்லைன்னு சொல்றது தப்பு. நேரத்தை ஒழுங்கா பயன்படுத்தறதில்லை. அதனாலதான்! பசங்களுக்கு இன்னும் பள்ளிக்கூடம் திறக்கலை. அதனால இன்னும் மோசம். :)

துரை, உங்களோட கமெண்ட் படிச்சபோது நினைவுக்கு வந்தது. என் பள்ளி நாட்களில் ஒரு முறை என் தோழி ஒருத்தியின் பாட்டி வீட்டிற்கு அவளுடன் சென்றிருந்த போது, அவள் பாட்டி அவளை, என்னடி, தட்டுவாணி முண்ட, ஆத்துக்கு வர இப்பதான் வழி தெரிஞ்சுதா? என்றபோது நான் அரண்டே போய் விட்டேன்.
அதே போல் என் பெரியம்மாவின் favorite டயலாக், அதுவும் high pitch-il: கண்ணா! கட்டைல போறவனே, எங்கடா போய் தொலஞ்ச! சமீபத்தில் நான் கண்ணனை பார்த்தபோதும் பெரியம்மா எப்போதும் திட்டும் இதை நினைத்து பார்த்து சிரித்தோம்.

geetha santhanam said...

துரை, மீனாக்ஷி உங்கள் கமெண்ட்டைப் படித்ததும் ஆச்சர்யம் அடைந்தேன். எப்போதும் சொல்வதால் அந்த வார்த்தைகளின் பொருள் அவர்களைத் தாக்குவதில்லை போலும். நானும் கூட 'கழுதை' என்று சரளமாக பயன்படுத்துவேன். என் மகள் என்னிடம் அப்படி சொல்லாதே என்று சண்டை போடுவாள். எப்படியாவது அந்தப் பழக்கத்தை விடவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

பத்மநாபன் said...

தவறுக்குள் தப்பை வைத்து எளிய நடையில் ஒரு நல்ல கதை...

geetha santhanam said...

நன்றி பத்மநாபன் சார். 'தவறுக்குள் தப்பை வைத்து...'கலக்கிட்டீங்க சார்.