Monday, 26 April 2010

அந்த நாள் ஞாபகம்... (1)

              நல்ல தூக்கத்திலிருந்த நேதன் திடுக்கிட்டு விழித்தார்.  அதே கனவு மறுபடியும்!!. குளிர் காலத்திலும் உடல் முழுதும் வியர்த்துவிட்டிருந்தது.  அருகே அமைதியாகத் தூங்கும் மனைவியைப் பொறாமையோடு பார்த்தார்.  தூக்கம் வராததால், டீ போட்டுக்கொண்டு, ஜன்னல் திரையை விலக்கி பனிப் பொழிவைப் பார்த்தவாறே கடந்த காலத்தை அசைபோடத் தொடங்கினார்.

             எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன!.  இருந்தாலும் அந்த நாளை மறக்க முடியவில்லையே!  கனடாவிற்குக் குடிபெயர்வதற்கு முன்தினம் நடந்தது.  அம்மாவைப் பார்க்க மதுரைப் பக்கம் இருக்கும் கிராமத்திற்குச் சென்ற அவர் காரில் வேகமாக சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.  மனைவியும் மகனும் அவருக்காகச் சென்னையில் காத்திருந்தார்கள்.  மறு நாள் இரவு கனடாவிற்குக் குடிபெயர வேண்டும்.  கொஞ்சம் சீக்கிரம் போனால் சிலமணி நேரமாவது ரெஸ்ட் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் வேகமாகக் காரை ஓட்டி வந்தார்.  அதிகாலை நேரம்.  கண்களில் கொஞ்சம் தூக்கக் கலக்கம் வேறு.  களைப்பாலும், அவசரத்தாலும் வளைவில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த மனிதரைக் கவனிக்கவில்லை.  இடித்துவிட்டு பத்தடி போனபின்தான் உறைத்தது.  பின்னால் வந்து பார்த்தால், அந்த மனிதர் (35- 40 வயது இருக்கும்)  'தண்ணீர்! தண்ணீர்!' என்று ஈன ஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தார்.  அடி எதுவும் பட்டது போல் தெரியவில்லை.  என்ன செய்ய என்று திகைத்து நிற்கையிலேயே அடிபட்டவர் மயங்கிவிட்டார்.  ரோட்டில் ஆளரவம் இல்லை.  இவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரி போகலாமா?  கேஸ் அது இது என்றாகிவிட்டால், கனடா எப்படி போவது? வெகுதூரத்தில் ஒரு வாகனம் வருவது தெரிந்தது.  'கடவுளே இவரைக் காப்பாற்று.  நான் நாளை கனடா சென்றே ஆகவேண்டும்.  என்னை மன்னித்து விடு' என்று எண்ணியவாறு அந்த வாகனம் வருவதற்கு முன் செல்ல வேண்டும் என்று வேகமாகக் காரைச் செலுத்தினார்.  வீடு வந்து சேரும்வரை மிகப் பதட்டமாக இருந்தது.  அந்த மனிதர் பிழைத்திருப்பாரா?  கடவுளே காப்பாற்று என்று வேண்டிய வண்ணம் இருந்தார். அன்று முழுதும் வீட்டில் calling bell அடிக்கும்போதெல்லாம் திகிலோடு கதவைத் திறந்தார்.  மறு நாள் விமானத்தில் ஏறும் வரை எந்த நேரமும் போலிஸ் வருமோ என்ற பயத்திலேயே கழித்தார்.

              கனடாவிற்கு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்.  ஸ்வாமினாதன் என்ற அவர் பெயர் 'நேதன்' ஆகச் சுருங்கிவிட்டது.  மகனுக்குத் தமிழ் மறந்துவிட்டது.  மனைவிக்குப் புடவை மறந்துவிட்டது. எல்லோரும் கனடா வாசத்தில் மூழ்கிவிட்டாலும் நேதனால் அந்த கார் விபத்தை மறக்க முடியவில்லை. அடிக்கடி கனவில் வந்து அந்த நிகழ்ச்சி அவரை வாட்டியது. அந்த மனிதனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.  அந்த குற்ற உணர்ச்சியை மறைக்க இந்தியாவில் பத்து பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டிருக்கிறார். நிறைய நல்ல காரியங்கள் செய்ய பணம் அனுப்புகிறார்.  எதுவுமே அவரின் குற்ற உணர்ச்சியைக் குறைக்கவில்லை.  நான்கு வயதில் கனடா வந்த மகன் இன்று டொரொண்டோ யூனிவர்ஸிட்டியில் படிக்கிறான்.  காலம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறது!!  இதுவரைக் கனவைப் பற்றி மனைவி மகனிடம் கூறியிருக்கிறாரே தவிர விபத்தைப் பற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை.  மனைவியும் மகனும் 'கொலைகாரப் பாவி' என்று தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம்!!.

               "என்னங்க, தூங்கலையா? வழக்கம்போல் அந்த nightmare-ஆ? ஏன் இப்படியென்று psychoanalyst-ஐப் பாருங்கள் என்றாலும் போக மறுக்கரீங்க." என்ற மனைவியின் குரல் கேட்டு திரும்பினார்.   "ஒண்ணும் கவலப்பட இல்ல. சீக்கிரம் எழுந்ததும் நல்லதுதான்.  இன்னக்கி விஜயை காலஜில் drop பண்ணனுமில்லை. கிளம்பினால் சரியாயிருக்கும்" என்று நேதன் அன்றைய அலுவல்களுக்குத் தயாராகலானார்.

             மகன் விஜயை யூனிவர்சிட்டியில் விட்டுக் கிளம்ப எத்தனித்தார்.  "hi, vijay" என்றபடி வந்த நண்பனை, "அப்பா, இதுதான் வினோத். chem.engineering first year பண்ணறான்." என்று அறிமுகப்படுத்தினான்.  அந்த வினோதின் கண்களில் தன்னைப் பார்த்ததும், ஆச்சரியம், கோவம், வெறுப்பு கடைசியில் ஒரு நிறைவு என்று பல உணர்ச்சிகள் மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்ததைக் கவனித்தவாறே, " hai, I am nathan.  nice to meet u.  come home when u get time" என்று சம்பிரதாயமாகக் கூறியவாறு அலுவலகம் நோக்கிக் காரைச் செலுத்தினார்.

----------தொடரும்

7 comments:

அப்பாதுரை said...

hmmm..circle of life.

எல் கே said...

nalla thuvakkam. ungal nadai nalla irukku . todarungal varugirom

ஸ்ரீராம். said...

கடைசியில் ஒரு நிறைவு....?? இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று பார்க்கக் காத்திருக்கிறேன்..

meenakshi said...

எதனால் அவருக்கு அந்த நிறைவு ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. நேதன் விநோதை மீண்டும் சந்திப்பாரா? கதை எப்படி போகும் என்று ஒரே யோஜனையாக இருக்கிறது.

meenakshi said...

இந்த கதையை படித்தபோது என் மனதில் என் வாழ்கையில் நடந்த அந்த நாள் ஞாபகம்தான். சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் ஊட்டி சென்று திரும்பி கொண்டிருக்கும் போது, வழியில் மூன்று பேர் எங்கள் காரை நிறுத்தி உதவி கேட்டனர். என்ன என்று பார்த்தால், அடிபட்ட ஒருவரை அவர்கள் தூக்கி கொண்டு நின்றிருந்தார்கள், அந்த அடிபட்டவரின் முகம் கூட தெரியவில்லை அவ்வளவு ரத்தம். எங்கள் கார் மாருதி 800, மிகவும் சிறியது. காரின் பின் இருக்கையில் எங்கள் ஐந்து வயது பெரியமகன், அருகில் நான், என் மடியில் ஒன்றரை வயது இரண்டாவது மகன் தூங்கி கொண்டிருந்தான். அந்த இடத்தில் இந்த மூன்று பேரை தவிர ஒரு ஆள் அரவம் கூட இல்லை, அது ஒரு சிறு
ஊர் போல கூட தெரியவில்லை. அருகிலும் ஒரு பெட்டி கடை கூட இல்லை. ரொம்ப பயமாக இருந்தது. அந்த அடிபட்டவரை எங்கள் காரில் ஏற்றி செல்ல வேண்டும் என்றால், நானும் என் குழந்தைகளும் ரோடில் நிற்க வேண்டும். நேரமோ மாலை மங்கி இரவு நெருங்கி கொண்டிருந்தது. அதனால் நாங்கள் மன்னிப்பு கேட்டுவிட்டு உதவாமல் சென்று விட்டோம். இது நடந்த சில நாட்கள் மனதில் அந்த அடிபட்டவ்ரின் ரத்த முகம் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. இப்படி உதவாமல் வந்துவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியால் மனதில் ஒரு வேதனை. அந்நியன் படத்தில் இது போல ஒரு காட்சியை பார்த்தபோது நாமும் அன்று இப்படிதானே செய்தோம் என்று எண்ணி வேதனையாக இருந்தது. ஒரு குற்ற உணர்ச்சி மனதில் இன்றும் இருக்கிறது.
அப்பாதுரை அவர் பதிவில் எழுதி இருப்பதை போல் வாழ்கையில் நடக்காதது எதுவுமே இல்லை.

Anonymous said...

arumai-waiting for next edition

geetha santhanam said...

மீனாக்ஷி,கதையின் நிகழ்வுக்கு ஒத்த நிகழ்ச்சி உங்கள் நிஜ வாழ்வில் நடந்தது ஆச்சர்யமாக இருக்கு. சில நேரங்களில் இயலாமையால் செய்யும் தவறுகளை குற்றம் என்று சொல்லலாமா? யோசிக்க வேண்டிய, விடை தெரியாத கேள்வி!--கீதா