Tuesday, 30 March 2010

திருடா திருடா - 2

              ஊருக்குப் போவதாக ஸ்ரீதர் சொன்னதைக் கேட்டதும் அரைப்ளேடுக்கு நம்பிக்கை மீண்டும் துளிர்விட்டது.  அருணாசலத்தின் தோள்களைச் சந்தோஷத்தோடுத் தட்டிக் கொடுத்தான்.  இருவரும் ஸ்ரீதர் செல்லும்வரைஅங்கேயே மறைந்திருந்திருக்க முடிவு செய்தனர்.
ஸ்ரீதர் கிளம்புவதற்குள் அடுத்த வீட்டு அம்புஜம் மாமியிடமிருந்து ஃபோன் வந்தது. '' நேத்து திருடன் வந்து ஆன கூத்தில் நான் தூங்கவே இல்லை.  காலையிலேயே வடகம் இட மாவு கிளறிட்டேன்.  நானும் பங்கஜமும் உங்காத்து மாடியில் வடகம் இட்டுக்கலாமா?" என்றார்.  ஸ்ரீதரும் சம்மதிக்கவே பங்கஜமும் அம்புஜமும் பத்து நிமிடங்களில் வடகம் இட ஸ்ரீதர் வீட்டு மாடியில் ஆஜராகினர்.  ஸ்ரீதர் வீட்டைப் பூட்டி சாவியை அம்புஜம் மாமியிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.   மாமிகள் இருவரும் சீரியல், சினிமா, சாமியார் கதைகளைப் பேசியபடியே வடகம் இட்டனர். மறைவிடத்தில் இருந்த அரைப்ளேடுக்கும் ஆறுமுகத்துக்கும் காலைக்கடன் கூட கழிக்க முடியாத நிலமை.

               மாமிகள் வேலை முடித்ததும் தன் மகள்களை வரச் சொல்லி கைப்பேசியில் அழைத்தனர்.  மகள்கள் வந்ததும் "ஒன்பது மணிக்குதானே உனக்கு பாட்டு க்ளாஸ்?  8.30 மணிவரை இங்கே இருங்கோ. அப்புறம் இந்த குடைகளை வைத்துவிட்டு ஆத்துக்கு வாங்கோ " என்று சொல்லி இருவரும் கீழே சென்றனர்.  என்னடாயிது சோதனை என்று அரை ப்ளேடும் ஆறுமுகமும் தலையைப் பிய்த்துக் கொண்டனர்.  லேசாக எட்டிப் பார்க்கலாமென்று அரைப்ளேடு எண்ணும்போதே அவர்களின் நிழலைக் கண்டு ஒரு பெண் "அங்க பாருடி,யாரோ மறைஞ்சிருக்கா மாதிரி இருக்கே" என்று சொன்னாள். இரண்டாமவள் எதையும் பார்க்காமலேயே "திருடந்தாண்டி, வா அப்பாகிட்ட சொல்லலாம்" என்று முதலாமவளையும் இழுத்துக் கொண்டு ஓடினாள். கிடைத்த சான்ஸைப் பயன்படுத்தி மாடியிலிருந்து pipe- ஐப் பிடித்து சறுக்கியபடியே கீழே வந்த அரைப்ளேடும் ஆறுமுகமும், நொடியில் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். திருடன் இருக்கானா என்று தேடிக்கொண்டு  மற்றவர்கள் மாடிக்கு வருவதற்குள் அரைப்ளடும் ஆறுமுகமும் அடுத்த தெரு வழியே அதிக தூரம் சென்றுவிட்டனர்.  ஒருவரையும் காணாததால் தன் மகள்கள் ஏதோ நிழலைக் கண்டு பயந்திருக்க வேண்டும் என்று சமாதானம் செய்தபடி திருடனைப் பிடிக்க வந்தவர்களும் வீட்டிற்குச் சென்றனர்.

               தப்பியோடிய அரைப்ளேடும் ஆறுமுகமும் பக்கத்திலுள்ள பூங்காவில் நுழைந்தனர். 'இது எதுவும் வேலைக்கு ஆகாது.வேற இடம் பார்க்கலாம்' என்று அரைப்ளேடு அலுத்துக் கொண்டான்.  " டென்சனாகத மாப்ளே. இதுதான் சரியான நேரம்.  ஐயர் வீட்டைப் பாத்தியா?  பக்கத்துலபெரிய க்ரௌண்டு.  எதிர்ல போஸ்டாபீஸு.  அதுவும் இன்னைக்கு லீவு.  பகல் பனிரெண்டு மணிக்கெல்லாம் எல்லாரும் வெயிலுக்கு பயந்து வீட்டுல அடங்கிடுவாங்க. நாம வேலையை சுளுவா முடிக்கலாம்" என்றான் ஆறுமுகம்.

 ஆறுமுகம்: "நாம க்ரௌண்டு வழியா போயி சுவரேறி குதித்து உள்ள போவோம்.  மாடிப்படிக்கு கீழதான் பாத்ரூம் சன்னல் கீது.  பாத்ரூம் சன்னல் க்ளாசை கழற்றிவிட்டால் நாம மெதுவாக உள்ளே போயிடலாம்.  ஐயரு போகசொல எல்லா சன்னல் கதவு, ஸ்க்ரீனெல்லாம் மூடினதால நாம உள்ள இருப்பது யாருக்கும் தெரியாது.  சத்தம் போடாம காரியத்தை முடித்துவிட்டு சன்னல் வழியாகவே வெளியே வரலாம்"  

அரைப்ளேடு: "க்ளாசை பிரிக்கும்போது யாரவது வந்துவிட்டால்?"

ஆறுமுகம்:  " கரீட்டு. என் சின்னப் பையன் சுகுரான பார்டி.  பக்கத்து க்ரௌண்டில் விளையாடுவது போல் நின்று அவன் யாராவது வந்தால் நமக்கு சிக்னல் கொடுப்பான்"

அரைப்ளேடு: "என்னப்பா இது. சின்ன புள்ளிய இப்டி கெடுக்கற. நான் இப்படி செய்தால் எம் பொஞ்ஜாதி சாமியாடிடும்"

ஆறுமுகம்:  " உன் பிக்பாக்கெட் பொய்ப்பு இனிமேல அவுட்டு.  நம்ம பொய்ப்பு அப்டியா?  இப்பதான் எல்லா பசங்களும் படிச்சவுடனே கை நிறைய சம்பாதிக்கறாங்க.  விதவிதமா வாட்ச், நகையெல்லாம் வாங்குறாங்கோ.  பெருசுங்கமாதிரி பூட்டி வைக்காம, அசால்ட்டா போட்டு வைக்கறாங்கோ.  பார், பார்ட்டின்னு சுத்தி லேட்டா வீட்டுக்கு வாராங்கோ. நம்மதிருட்டு தொழிலுக்கு இனிதான் நல்ல எதிர்காலம்.  என் பையனுக்கு தொழில்ல விருப்பம் இருக்கு.  இதுலென்னதப்பு.  பெரியவங்கல்லாம்சொல்லலை 'குலத்தொயிலை செய்'யின்னு?"

அரைப்ளேடு: "என்னமோ செய்யு. இப்ப எத்தினி மணிக்குப் போவனும்?"

ஆறுமுகம்: " நாஷ்தா துன்னுட்டு, ரெஸ்ட் எடுத்து, 12 மணிக்கு க்ரௌண்டுக்கு வா. நானும் பையனும் அங்க இருப்போம்".
ப்ளானை இருமுறை சரிபார்த்த பின்னர் இருவரும் பிரிந்து சென்றனர்.

             பகல் பனிரெண்டு மணிக்கு ஆறுமுகம் சொன்னதுபோல் தெருவே அமைதியாக இருந்தது.  ஆறுமுகத்தின் மகனும் அரைப்ளேடின் மகனும் க்ரௌண்டில் க்ரிகெட் விளையாடிக்கொண்டிருந்தனர். ஆறுமுகமும் அரைப்ளேடும் மெதுவாக சுவரேறி குதித்தனர்.  மெதுவாக பாத்ரூம் சன்னலில் சாய்வாக சொருகப்பட்ட க்ளாசை ஒன்றன் பின் ஒன்றாக கழற்றினர்.  ஆறுமுகத்தின் மகன் யாரேனும் ரோட்டுப் பக்கம் வந்தால் சிக்னல் கொடுத்தான்.  அப்போது இருவரும் ஒளிந்துகொண்டனர்.  இப்படியாக க்ளாசைக் கழற்றி வழி செய்தபின் மகன்களைப் போகச் சொல்லிவிட்டு இருவரும் பாத்ரூமிற்குள் குதித்தனர். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு வீட்டிற்குள் செல்ல எத்தனிக்கையில் வாசக்கதவு திறக்கும் ஒலி கேட்டது. உடனே இருவரும் பாத்ரூமுற்குள் சென்று பதுங்கினர்.

               உள்ளே வந்தது பங்கஜம் மற்றும் அம்புஜம் மாமியின் புதல்வர்கள்.  "சே, லீவுல கூட நிம்மதியா டிவி பாக்க முடியலை.  தூங்கனும்னு, வால்யூமைக் குறைக்க சொல்றாங்க.  நல்ல வேளை ஸ்ரீதர் அங்கிள் வீடு இருக்கு.  நிம்மதியா டிவி பார்க்கலாம்"என்றபடி பாட்ஷா படத்தைப் பார்க்கத் தொடங்கினர்.
அரைப்ளேடு மாட்டிகொள்வோமே என்று பதறினான்.  ஆறுமுகமோ கதவருகில் குத்திட்டு அமர்ந்து பாட்ஷா பட வசனங்களை ரசிக்கத் தொடங்கினான்.  இந்த இடத்தில் ஆறுமுகத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவன் எதையும் கூலாக எடுத்துக் கொள்வான்.  ஜெயிலில் கூட விசிலடித்துக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் அவன் வேலை செய்வதைப் பார்த்து சில போலிஸ்காரர்களுக்கேப் பொறாமையாக இருக்கும்.

             ஒருமணி நேரத்திற்குப் பிறகு மாமியின் புதல்வர்கள் டிவியை அணைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றதும் இருவரும் காரியத்தில் இறங்கினர்.  பெட்ரூமிற்குள் சென்ற அவர்கள் மெதுவாக பீரோவைத் திறக்க முற்பட்டனர்.  ஒன்று,இரண்டு, மூன்றாவது முயற்சியில் பீரோ தோற்று கதவைத்திறந்தது.  பட்டுப் புடவைகள், நல்ல பேண்ட் சட்டைகள், வெள்ளிப் பாத்திரம் மற்றும் இரண்டு தங்கச் செயின், மோதிரங்கள் என பீரோவைச் சூறையாடினர்.  அப்போது வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு, பீரோவை மூடி, கட்டிலின் கீழே ஒளிந்து கொண்டனர்.  டிவி பார்க்க வந்தபோது தன் செல்ஃபோனை மறந்து விட்டுச் சென்ற மாமியின் மகன்கள் வந்து 'கருமமே கண்ணாக' ஃபோனை மட்டும் எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டிக் கொண்டு சென்றனர்.  ஃபோனில் பேசிகொண்டே சென்றவன் பேண்ட் பாக்கெட்டில் வைப்பதாக எண்ணி ஸ்ரீதர் வீட்டுச் சாவியை ரோட்டிலேயே தவறவிட்டு போனான்.  'உள்ளே போன அப்பா ரொம்ப நேரமாக வரவில்லையே' என்று அந்தத் தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்த ஆறுமுகத்தின் மகன் அந்த சாவியை எடுத்தான்.  யாரும் பார்க்கவில்லையென்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு ஸ்ரீதர் வீட்டுக் கதவைத் திறந்து சன்னமான குரலில் "அப்பா" என்று அழைத்தான்.  மகனின் குரல் கேட்டு  ஆறுமுகம் அதிர்சியுடன் பெட்ரூமிலிருந்து வெளியே வந்தான்.  விவரங்களைக் கேட்டு சாவியை வாங்கிக்கொண்டு, மகனின் ஆர்வக் கோளாறைக் கண்டித்து அவனை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.  இதற்குள் ஹாலில் இருந்த வாட்ச், ipod முதலியவற்றை எடுத்து வைத்த அரைப்ளேடு VCR/VCD Player-யும் எடுக்க முற்பட்டான்.  "அத்த எடுக்காத மாப்ளே.  ஐயரு வரும்வரை திருடன் வந்தது யாருக்கும் தெரியக் கூடாது.  மத்தவங்களால ஈஸியா கண்டுபிடிக்க முடியாத சின்ன ஐட்டத்தை மட்டும் எடுத்துக்க, சீக்கிரம்" என்று ஆறுமுகம் அட்வைஸ் செய்தான்.  இருவரும் ஐந்து நிமிடங்களில் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரயினர்.

                வாசல் வழியாகப் போக எத்தனித்த அரைப்ளேடைத் தடுத்து, " சாவியை எடுத்துக்கோ.  வந்தமாதிரியே பாத்ரூம் வழியாகவே போலாம்.  வெளிலே போனபின் சாவியை ரோட்டில் வீசிவிட்டு ஓடிவிடுவோம்" என்றான் ஆறுமுகம்.  இருவரும் வெளியே செல்வதற்காக பாத்ரூமிற்குள் சென்றனர்.

               இதற்கிடையில் சாவியைத் தொலைத்ததை அறிந்த அம்புஜம் மாமியின் பையன் பதற்றத்தோடு ஸ்ரீதர் வீட்டிற்கு வந்தான்.  கதவு பூட்டப்படாமல் இருப்பது கண்டு அதிர்ந்து ஓசைப்படாமல் உள்ளே நுழைந்தான்.  பாத்ரூமுற்குள் பேச்சுக் குரல் கேட்டு வேகமாக வீட்டிற்கு வந்து அப்பா, மற்றும் நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்தான்.  அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வெளியே பாத்ரூம் சன்னலுக்கு இருபுறமும் மறைந்து நின்று கொண்டனர்.  வாசல் கதவருகே ஒருவர் நின்று கொண்டார்.
வெளியில் ஓசைப்படாமல் நடந்த இந்த முன்னேற்பாடு எதுவும் அறியாத அரைப்ளடும் ஆறுமுகமும் மெதுவாக திருடிய பொருட்களை சிறு மூட்டையாக்கி ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சன்னல் வழியே ஒருவர் பின் ஒருவராகக் குதித்தனர்.  குதித்தபின் இருபுறத்திலிருந்தும் வந்த கும்பலைப் பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.  தர்ம அடி அடித்து இருவரையும் கயிற்றால் கட்டி, போலீஸ் ஸ்டேஷனுக்குப் ஃபோன் செய்தனர் ஸ்ரீதரின் நண்பர்கள்.  " கவலப் படாத மச்சி. புழல் செயிலு எப்படி இருக்குன்னு பாக்கலாம்.  ஏதோ முட்டையோடு சோறு தருவதாக சொல்றாங்க" என்று சொன்ன ஆறுமுகத்தை வியப்போடு பார்த்தான் அரைப்ளேடு.

(இந்தக் கதையை எழுதத் தூண்டிய மீனாக்ஷிக்கு நன்றி)

Thursday, 25 March 2010

திருடா திருடா

              அரை ப்ளேடு அருணாச்சலமும் ஆறுமுகமும் அந்தத் தெருமுனையில் குத்த வைத்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆறுமுகம்: "என்ன அரை ப்ளேடு, பொய்ப்பெல்லாம் எப்படி கீது?"

அரைப்ளேடு: "என்னத்த சொல்ல.  பஸ் மாறி பஸ் ஏறி எறங்கினாலும் யூஜில்ல.  எல்லாரும் உள்பாக்கெட், பாக்கெட்டோட அண்டிராயர்னு சுகுரா இருக்கானுவ. அப்படியே பர்ஸ் கெடைச்சாலும், அது என்னவோ க்ரெடிட் கார்டாமே, அதுதான் கீது. அந்த எழவாலே நமக்கு ஒன்னியும் பிரோசனமில்ல.  அத்த வுடு.  உன் பொய்ப்ப சொல்லு."

ஆறுமுகம்:" நமக்கும் ஒன்னியும் சரியில்ல மாப்ளே.  அதென்னவோ புள்ளிங்களுக்கெல்லாம் எக்ஸாமாமே. அல்லாம் படிக்குதுங்க.  அவங்க அப்பனும் ஆத்தாளும் அலாரம் வைச்சு முழிச்சு காபி, டீ தராங்க.  இவங்க எப்ப தூங்குவாங்கன்னு பாத்து பாத்து நமக்கு அசந்து போனதுதான் மிச்சம்.  ரெண்டு மாசமா ஒன்னியும் பேரல. ஹும்".

               அவர்களின் கவனத்தை ஈர்த்தது ஒரு வேலைக்காரியிடம் ஒரு பெண் பெரிய குரலில் பேசியது.  "நீ நாளைலேர்ந்து பத்து நாள் வரவேண்டாம்.  நானும் பையன் சரணும் சாயந்திரம் ட்ரெயினுக்கு ஊருக்குப் போறோம்.  ஐயர் மட்டுந்தான் இருப்பாரு. "   ஆஹா என்று ஆறுமுகம் அந்த வீட்டை நோட்டம் விட்டான். போர்டிகோவில் கார், உள்ளே பெரிய டி.வி, ஒரு காட்ரேஜ் பீரோ- திருப்தியோடு அரைப்ளேடைப் பார்த்தான்.  அரைப்ளேடு கொஞ்சம் சந்தேகத்தோடு பார்க்கவே, "கேட்டுகினியா, ஐயரூட்டம்மா ட்ரேயின்ல போகுதாம். நகையெல்லாம் கள்ட்டி வைச்சுட்டுதான் போகும்.  இன்னக்கு நல்ல வேட்டைதான்" என்று சந்தோஷமாக ஆறுமுகம் அரைப்ளேடுடன் 'நாஷ்தா தின்ன'ப் போனான்.

              மாலை ஒரு பெரிய பெட்டி, இரண்டு கட்டைப் பைகள், ஒரு பெரிய டப்பா சகிதம் ஐயர்வீட்டு மாமி ஊருக்குக் கிளம்பினார்.  அவர் மகன் சரண் மட்டும் அப்பாவை விட்டுப் போக மனமில்லாமல் அழுதுகொண்டே இருந்தான்.  கையில் ஒரு நாய் பொம்மையுடன் அழுது கொண்டே இருந்த அவனைச் சமாதானப்படுத்தி தூக்கிவந்த ஐயர் (ஸ்ரீதர்) காரில் ஏறப் போனார்.  அப்போது பின்னாலிருந்து 'பாம் பாம்' என்று பெரும் சத்தத்துடன் லாரி வரவே சரண்  கையிலிருந்த நாய் பொம்மை 'வவ் வவ்' என்று குரைத்தது. சோம்பலோடு படுத்துக் கொண்டிருந்த தெரு நாய் உடனே குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிக் குலைத்தது. உடனே அழுகையை மறந்து, சரண் 'ஒன்னும் இல்ல, லாரிதான். பயப்பட்டு குரைக்காதே' என்று நாய் பொம்மையுடன் விளையாடத் தொடங்கினான்.  ஸ்ரீதரும் மனைவியையும் மகனையும் ஸ்டேஷனுக்குக் கொண்டுவிட காரைக் கிளப்பினார்.

               இதையெல்லாம் தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்த அரைப்ளேடும் ஆறுமுகமும் திருப்தியோடு தலையசைத்தனர்.  இருட்டும் வரை காத்திருந்து அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் டிவி சீரியலில் ஆழ்ந்திருக்கும்போது ஸ்ரீதர் வீட்டில் நைஸாக நுழைந்து பாலாறு சம்பிற்குப்(sump) பின்னால் ஒளிந்து கொண்டனர்.

               8.30 மணிபோல் வீடு திரும்பிய ஸ்ரீதர் ஒரு சம்பிரதாயத்திற்கு (மனைவி ஃபோனில் கேட்பாளே!!) வாசலில் சுற்றிப்பார்த்துவிட்டு கேட்டைப் பூட்டினார்.  கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு தூங்கப் போனார்.  அரைப்ளேடும் ஆறுமுகமும் மெதுவாக வீட்டின் பின்பக்கம் நோக்கி செல்ல எத்தனித்தனர்.  அப்போது அரைப்ளேடு கால் இடறி ஸம்பை மூடும் தகர மூடியின் மீது 'தம்' என்ற சத்தத்துடன் விழுந்தான்.   அதே நொடியில் மின்சாரமும் போனது.  ஸ்ரீதர் எமர்ஜென்சி லைட்டைத் தேடி எடுத்துவருவதற்குள், அரைப்ளேடும் ஆறுமுகமும் மாடிப் படியில் வேகமாக ஏறி மாடியிலுள்ள Syntex water tank-க்குப் பின்னால் பாதுகாப்பாக ஒளிந்து கொண்டனர்.  இதற்கிடையில் ஒரு நாய் ஈன  ஸ்வரத்தில் 'வவ் வவ்' எனக் குரைக்க ஒன்று, இரண்டு, மூன்று என பல நாய்கள் கோரசில் சேர்ந்து கொண்டன.  எல்லா நாய்களும் சடுதியில் ஒன்று கூடி ஸ்ரீதர் வீட்டைப் பார்த்து குலைக்கத் தொடங்கின.  இதற்குள் ஸ்ரீதரும் வாசலுக்கு வந்து "யாரு?" என்று பெரிதாகக் (பயமுறுத்துவதாக நினைத்து) கத்தினார்.
அக்கம் பக்கத்திலிருந்தும் அவரின் நண்பர்கள் எமர்ஜென்சி லைட்டோடு ஓடி வந்தனர். இவர்கள் ஏற்படுத்திய சத்தத்தில் தெரு நாய்களும் கலைந்து ஓடிவிட்டன.

              சுற்றும் முற்றும் தேடிப் பார்த்துவிட்டு யாரையும் காணாததால் வாசலுக்கே வந்தனர்.  என்னவாயிருக்கும் என்று கூடி ஆலோசித்த அவர்கள் பின் ஸ்ரீதருக்குத் துணையாக அவருடன் இருப்பது என்று முடிவெடுத்தனர்.  "சார், தெரு நாயெல்லாம் உங்க வீட்டைப் பார்த்து கத்துகின்றன.  நீங்க வேற ஏதோ சத்தம் கேட்டது என்று சொல்றீங்க.  நாளைக்கு ஏதாவதென்றால் அண்ணிக்கு யார் பதில் சொல்றது.  நாங்க உங்ககூட இன்னைக்கு நைட்டு தங்கிவிட்டுக் காலையில் போறோம்" என்று உரிமையுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.

              "நாங்க night patrol செய்றோம் மாமா" என்று நான்கைந்து இளைஞர்கள் முன்னுக்கு வந்தனர்.  அவர்கள் க்ரிகெட், அரசியல், சினிமா என்று     பேசிக்கொண்டே நடைபயின்றார்கள்.  'பாவம் பிள்ளைகள்' என்று சில அம்மாக்கள் முறை வைத்து டீ போட்டுக் கொடுத்தார்கள்.  இப்படி அந்தத் தெருவே ஒரு கல்யாண வீடு போல் களைகட்டிவிட்டது.

              கொஞ்ச நேரத்தில் கரண்ட்டும் வந்தது.  எல்லா லைட்டையும் போட்டு வீட்டைச் சுற்றி பார்த்தனர்.  அரை ப்ளேடு மற்றும் ஆறுமுகத்தின் நல்ல நேரம் அவர்கள் மாடிக்குச் சென்று பார்க்கவில்லை (வேறென்ன, பயம்தான்!!).  வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று டிவி பார்த்தனர்.  "சார், பேசாமல் லைட்டெல்லாம் போட்டு வைத்திருப்போம்.  நாளைக்கு லீவுதான்.  நம்ம வழக்கமான சீட்டுக் கச்சேரியை இன்னைக்கே போடுவோம்.  பொழுதும் போகும்.  நாம முழித்திருப்பதால் திருடனும் வரமாட்டான்" என்று நண்பர் கூறியதை மற்றவர்களும் ஒப்புக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர்.  விளையாட்டு ஸ்வாரஸ்யத்தில் திருடனைப் பற்றி மறந்தே போயினர்.

               வாட்டர் டாங்க் பின்னால் ஒளிந்து கொண்ட அரை ப்ளேடுக்கும் ஆறுமுகத்திற்கும் அடுத்தடுத்து எல்லாம் தங்கள் ப்ளானிற்கு எதிராகவே நடப்பதை நினைத்து பெரும் ஏமாற்றம்.  இப்போது மறைவிடத்திலிருந்து வெளியிலும் வரமுடியாத நிலமை!!.

              இப்படியே காலை 5 மணியாகிவிட்டது.  நண்பர்களும் சீட்டாட்டத்தை முடித்துக் கொண்டு வீடு செல்ல வெளியில் வந்தனர்.  "ஏம்பா, நேற்று திருடன் இருப்பானா என்ற கோணத்திலேயே தேடினோம்.  ஒரு வேளை நாய் ஏதாவது அடிபட்டுக் கொண்டிருக்குமோ!.  இருங்கள், நான் காருக்குக் கீழே பார்க்கிறேன்" என்று ஸ்ரீதர் காரைச் சுற்றி வந்தார்.  காலால் காரை எத்தி சத்தம் செய்தார்.  'வவ் வவ்' என்று சத்தம் வரவும் நண்பர்களும் வந்து கரைச் சுற்றிப் பார்த்தனர்.  ஒன்றும் இல்லை.  திடீரென்று நினைவு வந்தவராக ஸ்ரீதர் கார் சாவியைக் கொண்டு வந்து காரிலிருந்து ஒரு நாய் பொம்மையை வெளியில் எடுத்தார்.  விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.  ஒன்றும் புரியாமல் விழித்த நண்பர்களிடம் 'இது சரனோட பொம்மை.  சத்தம் வந்தால் குரைக்கும்.  நேற்று ஏதோ நாய் இந்தப் பக்கம் 'தம்' என்ற சத்ததுடன் குதித்துப் போயிருக்க வேண்டும்.  சத்தம் கேட்டதும் இந்த பொம்மை வவ் வவ் என்று குரைத்திருக்கும் மற்ற நாய்களும் தன் தோழன் யாருக்கோ பிரச்சினை என்று குரைத்திருகின்றன.  இதுவும் சத்ததிற்குப் பதில் குரல் கொடுத்திருக்க வேண்டும்.  நாமெல்லாம் ஏதோ திருடந்தான் வந்துவிட்டான் என்று எண்ணி வீட்டைச் சுற்றி தேடியிருக்கிறோம். Any way , சீட்டாட்டம் நன்றாகத்தான் இருந்தது" என்றார்.  நண்பர்களும் கூடிச் சிரித்தனர்.

              " இது நல்லா இருக்கே.  நான் கூட ஒன்று வாங்கி வாசலில் வைக்கப் போகிறேன்.  சத்தம் கேட்டால் இது குரைக்க, தெரு நாய்களும் குரைக்க, திருடன் அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவான்.  பாவம், உன் பையன் இதை மிஸ் பண்ணி அழப் போறான்" என்றனர்.  ஸ்ரீதர் ஒரு நிமிடம் யோசித்தார்.  பின்னர் நண்பர்களிடம் " அவன் பாவம்.  நேற்று என்னை விட்டுப் போக மனமில்லாமல் ரொம்ப அழுதான்.  அந்த களேவரத்தில்தான் இந்த பொம்மையை வைத்துவிட்டுப் போயிருப்பான்.  காலையில் எழுந்தவுடன் இந்த பொம்மையைக் காணாமல் அழுவான்.  ஜுரம் ஏதாவது வந்துவிடப் போகிறது.  நான் 5.45 மணி ரதிமீனா பஸ்ஸைப் பிடித்து ஊருக்குப் போய் இதைக் கொடுத்துவிட்டு ராத்திரி பஸ்ஸில் திரும்ப வருகிறேன்.  வீட்டுச்சாவியை உங்களிடம் கொடுக்கிறேன்.  பார்த்துக் கொள்ளுங்கள் " என்றார்.  மகனிடம் அவர் வைத்திருந்த பாசம் ஊரறிந்த விஷயம் ஆதலால் நண்பர்களும் அவரைத் தடுக்கவில்லை.

               ஏமாற்றத்தோடு மறைவிடத்தில் நின்றிருந்த ஆறுமுகமும் அரைப்ளேடும் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

(நன்றி எங்கள் ப்ளாக்.  உங்களின் அனுபவத்தில் என் கற்பனை கொஞ்சம் கலந்திருக்கிறேன்.  royalty  எதுவும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!!)

Wednesday, 24 March 2010

ஜோரான ஜோர்டன்-6 (Dead sea)

            ஜெராஷ் புராதன நகரைச் சுற்றிப் பார்த்தபின் dead sea -ஐ நோக்கிப் பயணித்தோம்.  அம்மானிலிருந்து 60 கிமீ தொலைவிலிருக்கிறது dead sea.  கீழ்நோக்கிய சரிவில் செல்லும் பாதையில் பயணித்து கிட்டத்தட்ட sea level-லிருந்து 400மீ கீழேயுள்ள dead sea-யை அடைந்தோம்.  கீழ் நோக்கிப் பயணிக்கும்போதே ஏற்படும் காற்றழுத்த வேறுபாட்டால் என் மகள் காதுவலி என்று சொல்ல ஆரம்பித்தாள்.  எங்களால் காற்றழுத்த வேறுபாட்டை உணர முடியவில்லை என்றாலும் பூமியின் lowest point-க்குச் செல்லும் த்ரில் இருந்தது.


            Dead sea -யை சுற்றிலும் பெரு மலைகள்தான் இருக்கின்றன.  ஜோர்டன் ஆறு இங்குதான் கலக்கிறது.  சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்டதாலும், இது வேறு எந்த பெருங்கடலுடன் இணையாததாலும், அதிக அளவு நீர் ஆவியாவதாலும் (evaporation) இங்கு நீரில் அதிக அளவு உப்பு மற்றும் தாதுப் பொருட்கள் (salt and minerals) இருக்கிறன.  இங்குள்ள நீரில் 35% உப்பு மற்றும் தாதுப் பொருட்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது மற்ற கடலில் இருப்பதைப்போல் 4-5 மடங்கு அதிகம்.  இதனால்தான் இந்தக்கடலில் உயிரினம் எதுவுமில்லை.  அதனால்தான் சாக்கடல் (dead sea) என்றழைக்கப்படுகிறது.  இந்தக் கடல் நீரின் அதிக அடர்த்தியினால் (density of dead ses water is high because of the dissolved salt and minerals) எளிதாக மிதந்து நீச்சலடிக்கலாம்.


             Dead sea கரையில் எல்லா ஐந்து, நான்கு நட்சத்திர ஓட்டல்களெல்லாம் ரெஸார்ட் வைத்து நன்றாகப் பணம் சேர்க்கிறார்கள். எங்கள் guide cum driver எங்களை dead sea spa என்ற ரெசார்ட்டுக்குக் கூட்டிச் சென்றார்.  என் கணவர் முன்பே சாக்கடலில் குளித்திருப்பதால் மகளுக்குத் துணையாயிருந்தார். நானும் என் அண்ணனும் கடலில் இறங்கினோம்.  தண்ணீர் ஃப்ரிட்ஜில் வைக்கப் பட்ட தண்ணிபோல் சில்லென்று இருந்தது.  மேலும் கரையோரத்தில் கொஞ்சம் குப்பை நிறைந்து இருந்தது.  இருந்தாலும் குளித்தே தீருவது என்று உள்ளே சென்றோம்.  என் அண்ணன் தண்ணீரில் மிதந்து குளித்தார்.  நான் கழுத்துவரை தண்ணீரில் நின்றாலும், இந்த நீரில் மூழ்காமல் மிதப்பது எளிது என்று அறிந்திருந்தாலும் கொஞ்சம் பயத்துடன் நின்று கொண்டே இருந்தேன்.  பின்னர் கொஞ்சம் தைரியம் வந்து (இதற்குப் பிறகு இங்கு எப்ப வருவோம்,  சான்ஸை விடக்கூடாது!) ஒரு சில நிமிடங்கள் மிதந்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்.  வெயில்காலமென்றால் இன்னும் கூட அதிக நேரம் இருந்திருக்கலாம்.  மழைக் காலக் குளிரில் கொஞ்சம் கடினமாக இருந்தது.  ஆனால் 10 நிமிடங்கள் நீரில் நின்றதற்கே சருமம் soft-ஆக ஆனதை உணர முடிந்தது.


             Dead sea-யிலிருந்து மண், உப்பு என்று எல்லாவற்றையும் எடுத்து சரும நலத்துக்கு நல்லது என்று விற்கிறார்கள்.  நாங்களும் உப்பு, மண், க்ரீம் எல்லாம் வாங்கிவந்தோம். அங்கிருந்து கிளம்பி இஸ்ரேல் எல்லையைத் தொட்டுப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.  இரவு நன்றாகத் தூங்கிவிட்டு மறு நாள் நண்பகலில் குவைத்திற்குத் திரும்ப விமானத்தில் ஏறினோம்.  நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகவே ஜோர்டன் சுற்றுலா இனிமையாக முடிந்தது.

           இப்பயணத் தொடரை எழுதியது மீண்டும் Jordan சென்ற நிறைவைக் கொடுத்தது.  இதைத் தொடர்ந்து படித்து மேலும் எழுத ஊக்கமளித்த அன்பர்களுக்கு நன்றி.

Friday, 19 March 2010

படித்ததில் பிடித்தது

 படித்ததில் பிடித்தது
பிடித்ததால் சுட்டது


Image

Boss and employee
 (Click for previous view!)

Tuesday, 16 March 2010

ஜோரான ஜோர்டன்-5 (ஜெராஷ்)


  
            அம்மான் செல்லும் வழியில் கிறுஸ்துவர்களின் புனிதத் தலமான Mount Nebo-விற்குச் சென்றோம்.  போகும் வழியில் அழகாக பச்சை பசேலென்று புல் போர்த்திய மலைகள் கண்களைக் கவர்ந்தன.  Mount Nebo -விலிருந்துதான் இறைவன் மோஸசிடம் இஸ்ரேலியர்களுக்கு உரித்தான holy land ஐக் காட்டினாராம்.  இங்குதான் மோஸஸ் உயிர் நீத்தார் என்றும் நம்பப்படுகிறது.  அவருக்கு இங்கு ஒரு சமாதியும் பின்னர் எழுப்பப்பட்டுள்ளது.  இந்த காரணங்களால் இந்த இடம் ஒரு புனித தலமாகக் கருதப்படுகிறது. மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் ஜோர்டன் அழகாகத் தெரிந்தது.




 அங்கிருந்து dead sea, இஸ்ரேல் எல்லை வரை பார்க்க முடிந்தது.   மோஸஸ் வைத்திருந்த brass serpent மற்றும் ஜீஸஸ் சிலுவையில் அறையப்பட்டதையும் குறிக்கும் வகையில் serpentine cross வைக்கப்பட்டுள்ளது.



நீபோ மலையைப் பார்த்த பின்னர் அம்மான் ஜெனீவா ஹோட்டலில் இரவைக் கழித்தோம்.

              மறுநாள் காலையில் பழங்கால நகரமான ஜெராஷ் நகரைப் பார்க்கக் கிளம்பினோம்.  ஜெராஷ் நகரம் அம்மானிலிருந்து 48 கிமீ தொலைவில் இருக்கிறது.  இங்கு ரோமானியர்களால் நிர்மாணிக்கப்பட்ட அழகிய நகரம் அவர்களின் கட்டடக் கலையழகைப் பறைசாற்றுவதாக இருக்கிறது.  கிட்டத்தட்ட கி.பி 90-கி.பி130 கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இன்றும் நிலைத்திருப்பது ஆச்சரியம்!!!.  இடையில் மண்ணில் புதைந்த இந்த நகரம் Ulrich Jasper Seetzen என்ற ஜெர்மானியரால் அடையாளம் காட்டப்பட்டதென்றாலும், முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டது 1925-க்குப் பிறகுதான்.

              ஒரு லோக்கல் கைடுடன் நாங்கள் ஜெராஷ் புராதான நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.  மழை இன்றும் எங்களை விரட்டிக் கொண்டு வந்தது. குளிருக்கு அடக்கமாக கம்பளி உடைகளும், மழையிலிருந்து காக்க rain coat-ம் அணிந்து கொண்டு மலையேறத் தொடங்கினோம்.

               நம் பயணம் தெற்கு வாசலிலிருந்து தொடங்குகிறது.  வாயிலில் உள்ள Arch, Hadrian Arch எனப்படுகிறது.  கி.பி.129-ஆண்டு ஹட்ரியன் என்ற அரசர் ஜெராஷுக்கு வந்த்தையொட்டிக் கட்டப்பட்டதாம் இது!!!.



                      அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் Hippodrome உள்ளது.  கி.பி 2 அல்லது 3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த Hippodrome , 245 மீ நீளமும், 52மீ அகலமும் கொண்டது.  இந்த இடம் விளையாட்டுப் போட்டிகளும், குதிரை மற்றும் தேரோட்டப் பந்தயங்களும் (Benhur படத்தில் பார்த்திருப்பீர்களே அதைப்போல்) நடத்தப் பயன்படுத்தப்பட்டதாம்.


(hippodrome is seen on our left side)

              அங்கிருந்து மேலும் மேலே ஏறிச் சென்றால் oval plaza  என்று சொல்லப்படும் இடத்தை (90 மீ x 80 மீ)  அடைகிறோம்.  இங்கு வட்ட வடிவில் நிறுத்தப்பட்டுள்ள உயர்ந்த தூண்களும் கற்களால் அமைந்த தரையும் அவர்களின் கட்டடக் கலை நிபுணத்துவதிற்கு ஒரு அறிமுகமாக இருக்கின்றன. அதற்கு எதிரில் கோவில்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.



             இன்னும் கொஞ்சம் மேலே ஏறினால் (ஏறுவது உண்மையிலேயே கடினமாக இருந்தது)  பிரமிக்க வைக்கும் பிரும்மாண்டமான ரோமன் தியேட்டரைப் பார்க்க முடிகிறது.  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வண்ணம் அமைந்த இந்த தியேட்டர் முழுவதும் வெண்ணிறக் கற்களால் ஆனது.  எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் அண்ணனுடன் கடைசி row வரை ஏறிப் பார்த்துவிட்டேன்.





             ஜெராஷில் மிகவும் பிரமிக்கவைக்கும் கட்டிடம் இதுதான் என்று சொல்வேன்.

              பின்னர் பல சிதிலமடைந்த சர்ச் மற்றும் ரோமானியர்களின் கோவில்களைப் பார்த்தோம்.  இதற்குள் மழை வலுக்கத் தொடங்கியது.  ஆனாலும் கவலைப் படாமல் எல்லா புராதானச் சின்னங்களையும் பார்த்துவிட்டுத்தான் திரும்பினோம்.


         (a temple)
                          

      ( தரையில் டிசைன் தெரிகிறதா?)
                     
--
(புராதான நகருக்கு இடையே இன்றைய ஜெராஷ் நகரம்)

இந்த நகரை நிர்மாணிக்க இத்தனைப் பெரிய கற்களை எப்படி ஏற்றிச் சென்றார்கள்.  நடந்து சென்று பார்க்கவே நமக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது!!  அதுவும் அந்த ரோமன் தியேட்டர் கட்டியது உண்மையிலேயே வியக்கத்தக்கதுதான்!!!.

அந்த புராதான நகரின் அழகு, மழை மற்றும் குளிரை மறக்கச் செய்வதாக இருந்தது.  கீழே இறங்கியவுடன் குளிருக்கு இதமாக ஒரு ஹெர்பல் டீ (உண்மையிலேயே சூப்பர்) குடித்தோம்.  சில souvenirs வாங்கிக் கொண்டு dead sea-யை நோக்கிப் புறப்பட்டோம்.

'மாலை'யிட்ட மங்கை





மாயாவதி அம்மையாருக்கு அன்பர்கள் சூட்டிய மாலை!!! மணமாலை கேள்விப்பட்டிருக்கிறோம்; பணமாலை கேள்விப்பட்டிருக்கிறோம். பணமலை மாலை?!!!
5 கோடியாமில்லை? ம்......சுற்றி இருப்பவர்கள் ஏக்கத்தோடு என்ன எண்ணியிருப்பார்கள்?

1. " இதில் நாம் 33% கேட்கலாமா?!"

2."இது கட்சிக்கு வருமா? இல்லை வெறும் காட்சிக்குத்தானா?!!!"

'

Wednesday, 10 March 2010

ஜோரான ஜோர்டன் -4 (வாடிரம்)


           காலை உணவிற்குப் பின்னர் வாடிரம் (Wadi Rum) நோக்கிப் புறப்பட்டோம்.  வாடிரம் பெட்ராவிலிருந்து 120 கிமீ தொலைவில் உள்ளது.  கிட்டதட்ட 1.5 மணி நேரம் காரில் பயணம் செய்யவேண்டும்.  போகும் வழியிலெல்லாம் பாறை மலைகளின் அழகு கருத்தைக் கவர்வதாக இருந்தது.  கனடாவிலெல்லாம் இதைப் போன்ற இயற்கை எழில் மிகுந்த பாதைகளில் இடை இடையே பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தி ஃபோட்டோ எடுக்க வசதியாக viewing spot இருக்கும்.  இங்கு அந்த வசதி இல்லாததால் மிக அழகான காட்சிகளைக் கூட காரிலிருந்தபடியேதான் ஃபோட்டோ எடுக்க முடிந்தது.

               வாடிரம், பாறை மலைகள் நிறைந்த விரிந்த பாலைவனம்.  கிட்டத்தட்ட 720 சதுர கிமீ பரப்பு கொண்டது.  வாடிரம் என்றால் மலையும் மடுவும் (mountains and valleys) என்று பொருள்.  பரந்த பாலைவனப் பரப்பில் பெரு மலைகள் நிமிர்ந்து நிற்கும் காட்சி காணத் திகட்டாததாக இருக்கிறது.  இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க ஒட்டகங்களும், vanகளும் கிடைக்கின்றன.  நுழைவுச் சீட்டு வாங்கி எங்களை ஒரு லோக்கல் கைடுடன் செல்ல ஏற்பாடு செய்தார் எங்கள் driver and Travel guide Mr. Mehmood.  ஒரு வேனில் ஏறி வாடிரம்மைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.  சிறிது தூரப் பயணத்திற்குப் பின்னர் சரளைக் கற்கள் நிறைந்த ஒரு மலை அடிவாரத்தில் நிறுத்தி சிறிது நேரம் மலையேறி மகிழ்ந்தோம்.  கொஞ்ச தூரம் ஏறியவுடனே எங்கள் கைடு , நேரமாவதால் விரைவில் கீழே இறங்குமாறு கூறவே  இறங்கினோம்.  அருகிலிருந்த bedouin tent-ல் சுமாரான ஹெர்பல் டீ குடித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

---
        

 10 நிமிட பயணத்திற்குப் பிறகு ஒரு canyon-ஐ அடைந்தோம் (பெயர் நினைவில் இல்லை).  இங்கு பாறை நிறமும் போகப்போக உள்ளுக்குள் விரிந்துகொண்டே போகும் அமைப்பும் பெட் ராவை நினைவூட்டுவதாக இருக்கின்றது.  முதலில் உற்சாகத்துடன் ஏறிய நான் ஒரு இடத்தில் (10மீ உயரத்தில் ஒற்றையடிப் பாதையில் செல்லவேண்டும்) பயந்தபோது என் அண்ணனும் , கணவரும், மகளும் பயப்படாமல் முன்னேறிச் செல்வதைப் பார்த்து மெதுவாக பயத்துடன் கடந்தேன்.  உள்ளே செல்லச் செல்ல மேலும் பாதை விரிந்து கொண்டே சென்றது.  இந்த canyon லேயே அரை நாள் தாராளமாக explore செய்துகொண்டே போகலாம்.

               பின்னர் மீண்டும் வேனில் பயணம்.  வழியில் ஒரு பெரிய மலையில் கிட்டத்தட்ட மலையின் அளவிற்கே ஒரு பெண்ணின் ஒவியத்தைப் பார்த்தோம். அது இயற்கை வரைந்த ஓவியமா இல்லை மனிதனின் கைவண்ணமா தெரியவில்லை.  இயற்கையானதென்றால் இத்தனை துல்லியமாக எப்படி அமைந்தது?  மனிதனுடையதென்றால் (chance -ஏ இல்லை) இத்தனை பிரும்மாண்டமாக எப்படி முடிந்தது? விவாதித்துக் கொண்டே ஃபோட்டோ எடுக்க முனைந்தோம்.  இறைவன் கொடுத்த இயற்கை காமிரா (நம் கண் தான்!!) வினால்  கண்டு ரசிக்க முடிந்தது, மனிதன் படைத்த காமிராவில் சிறப்பாக வரவில்லை. என்னால் முடிந்த அளவு கொடுத்திருக்கிறேன்.  கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

---

               காரில் பயணித்தபடியே புர்டா (Burdah) பாறை பாலத்தை அடைந்தோம்.  35-40மீ உயரத்தில் இந்த இயற்கையாகவே அமைந்த பாறைப் பாலம் பார்க்க பிரமிபூட்டுவதாக இருக்கிறது.

---

              அந்த பாறை பாலத்திலேயே ஒரு பாறையில் மீண்டும் இயற்கையின் கைவண்ணத்தைப் பார்க்க முடிகிறது.  என் கண்ணிற்கும் கற்பனைக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியும், ஒரு மனிதனும், கையை விரித்த நிலையில் ஒரு எலும்புக்கூடும் (ok, ok! இதோடு நிறுத்திக்கொள்கிறேன்!!) தெரிகின்றன.

---

                அங்கிருந்து புறப்பட்ட இடம் நோக்கித் திரும்பினோம்.  வரும் வழியில் எகிப்து பிரமிட் போல் ஒரு மலையையும், seven pillars of wisdom என்றழைக்கப்பட்ட மலையையும் பார்த்தோம்.

 ---
             seven pillars of wisdom
          
             வாடிரம்மில்தான் Lawrence of Arabia என்ற புகழ்பெற்ற படம் எடுக்கப்பட்டதாம். (பார்க்கவேண்டும் என்று குறித்துக் கொண்டோம்). வாடிரம்மில் கோடைக்காலத்தில் hotair balloon rides  இருக்குமாம். மலையேறுவதில் விருப்பம் உள்ளவர்கள், புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் அன்றி அனைவரும் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இடம் இந்த வாடிரம்.  இங்கு கோடைக் காலத்தில் இரவு தங்கி பார்க்கவும் வசதிகள் உண்டாம்.  2-3 நாட்களுக்குக் கூட explore பண்ண நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

             எண்ணற்ற அழகுக் காட்சிகளையும் ஆச்சரியங்களையும் தன்னுள் வைத்திருக்கும் வாடிரம்மை விட்டுக் கிளம்ப மனமில்லாமல் கிளம்பினோம்.
எங்களை அழைத்துச் சென்ற கைடிற்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி அம்மான் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

Monday, 8 March 2010

ladies special?!!!!

           நேற்று சர்வதேச மகளிர் தினம், அதுவும் 100-வது ச.ம.தி!!!.  எனக்கு இந்த மகளிர் தினம், காதலர் தினம், அன்னையர் மற்றும் தந்தையர் தினம் கொண்டாடுவதில் உடன்பாடு இல்லை.
           ச.ம.தியை ஒட்டி நம் பார்லிமெண்டில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பெரும்பாடுபடுகின்றனர்.   எதுக்குதான் இட ஒதுக்கீடு என்று வரைமுறை கிடையாதா?  M.P., M.L.A.,  எல்லோரும் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  திறமையும் செல்வாக்கும் இருந்தால் தேர்தேலில் நிற்க வாய்ப்பும், வெற்றியும் கிடைக்குமே?  இதற்கு எதற்கு இட ஒதுக்கீடு?!!!
            மேலும் இப்போது அரசியலில் முண்ணனியில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பெண் தலைவர்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் அறிவுபூர்வமாக இன்றி உணர்வுபூர்வமாகவே இருக்கிறது. இன்னும் சிலரோ கணவர் அல்லது கட்சி தலைவரின் கைப்பாவையாக பணியாற்றுகிறார்கள்.  இப்படியிருக்க எந்த தைரியத்தில் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்? அதுவும் 33% என்பது too, too ,too much ஆக இருக்கிறது.  
          இட ஒடுக்கீடு என்பது (திறமையற்றவர்களைக் கொண்டு) இட்டு நிரப்பதான் பயன்படுமே அன்றி மகளிருகோ, நாட்டிற்கோ இம்மியளவும் பயன் தரப் போவதில்லை!!!.
         இப்படியே போனால், இனி எல்லா விருதுகளுக்கும் கூட மகளிருக்கு இட ஒதுக்கீடு கேட்பார்கள் போலிருக்கு (சும்மா கொளுத்திப் போடுவோம்!!!) 

ஜோரான ஜோர்டன்-3 (பெட்ரா)




              இப்படி அழகை ரசித்துக் கொண்டே ஏறக்குறைய 1.5 கி.மீ நடந்தால் திடீரென்று இரு பாறைகளுக்கு நடுவில் பெட்ராவின் முக்கியமான நினைவு சின்னம் treasury தெரிகிறது.  



இன்னும் கொஞ்சம் முன்னேறிச் சென்றால் முழுதுமாக வெளிப்படும் 40-45மீ உயரமுள்ள பாறையில் மனிதனால் செதுக்கப்பட்ட கட்டிடமான treasury-யின் பிரும்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.
 

               இதுவும் ஒரு கோவிலாகவோ அல்லது சமாதியாகவோ இருந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.  அங்கிருக்கும் லோக்கல் அரபு மக்கள் ( bedouins) இங்கு ஏதோ புதையல் இருக்கும் என்று எண்ணி இதை உடைக்கப் பல முயற்சிகள் செய்ததாகவும் தெரிகிறது.  புதையல் இருக்கும் என்று எண்ணி அவர்கள் treasury (al-khazana) என்றழைக்க அந்த பெயரே நிலைத்துவிட்டது.

               இந்த இடம் வரைதான் கீழிருந்து வந்த guides வருகிறார்கள்.  இதற்கு மேலே போகவேண்டுமென்றால் லோக்கல் மக்கள் நம்மை அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்கள். (அவர்களுக்குள் தொழில்முறை உடன்படிக்கை இருக்கும் என்று தோன்றுகிறது).  அவர்களுக்குத் தனியாக பணம் கொடுக்கவேண்டும்.  மேலே செல்ல ஒட்டகங்களும் இருக்கின்றன.  ஒட்டக சவாரி செய்ய என் அண்ணன் விரும்பியதால் என் கணவரும் அண்ணனும் ஒட்டகத்தில் ஏறி வர நானும் என் மகளும் ('எவ்வளவு தூரம் வேணும்னாலும் நடக்கிறேன்; ஒட்டகத்தில் ம்ட்டும் ஏறவே மாட்டேன்' என்றாள் என்   மகள்) நடந்து guide கூட நடந்தும் மேலே ஏறினோம்.  ஒட்டகத்தில் ஏறுவது கிட்டத்தட்ட amusement park-ல் ride-ல் செல்வதற்கு ஈடானது.   உட்கார்ந்திருக்கும் ஒட்டகத்தின் முதுகில் நாம் ஏறியதும் முதலில் பின்னங்கால்களைத் தூக்கும். அப்போது நாம் வேகமாக முன்னால் சாய்வோம்.  பின்னர் முன்னங்கால்களைத் தூக்கி எழுந்திருக்கும்.  அப்போது நாம் வேகமாக பின்னால் தள்ளப்பட்டு பின்னர் சம நிலைக்கு வருவோம்.  என் அண்ணனும் கணவரும் வீல் வீல் என்று கத்தி பின்னர் ஒட்டக சவாரியை ரசிக்கத் தொடங்கினர்.

 


             10 நிமிட நடைக்குப் பிறகு ரோமன் தியேட்டர் என்று சொல்லப்படும் இடத்தை அடைந்தோம்.  இதற்கு மேலும் பல மைல் தூரம் செல்லவும் பார்க்கவும் இடங்கள் இருக்கின்றனவாம்.  ஆனால் இடியும் மின்னலும் கடுமையாக வரவே நாங்கள் வேகமாக கீழே இறங்கினோம்.  நாங்கள் treasury -யை அடைவதற்குள் மழை வலுத்துவிட்டது.  பாறைகளின் நிழலில் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒதுங்க முற்பட்டோம். எங்கள் guide சமயோசிதமாக அங்கிருந்த ஒரே truck யை  (ஒட்டகங்களை ஏற்றிவர பயன்படுத்தியதாக இருக்கலாம்) ஏற்பாடு செய்து எங்களை ஏறுமாறு வற்புறுத்தினார்.  அவர் குரலிலும் செயலிலும் தெரிந்த பதற்றத்தைப் பார்த்து நாங்களும் வேகமாக ஏறிக்கொண்டோம்.  வரும் வழியில் மழை வலுக்கத் தொடங்கியது அல்லாமல் பனிமழையும் பெய்யத்தொடங்கியது.  ஒரு வழியாக கீழே வந்தடைந்தோம்.  இது போன்று 1960-களில் பெரு மழை வந்தபோது ஏற்பட்ட flash flood-ல் நிறைய சுற்றுலா பயணிகள் மாட்டிகொண்டு கஷ்ட்டப்பட்டதைத் தான் நேரில் பார்த்ததால்தான் இத்தனைப் பதற்றம் அடைந்ததாக எங்கள் guide சொன்னார்.  அவரின் சமயோசிதத்தைப் பாராட்டி வெகுமதி அளித்துவிட்டு எங்கள் காரில் ஏறினோம்.  வழியெங்கும் மழை நீர் ஆறு போல் ஓடி வந்துகொண்டிருந்தது.  லேசான பனிப் பொழிவும் ஆரம்பித்தது.  ஹோட்டலுக்குச் சென்ற சிறுது நேரத்தில் பனிமழை வலுத்தது.  படபடவென்று விழும் பனிமழையை எங்கள் மகள் மிகவும் ரசித்தாள்.
பனிமழை சிறிது ஓய்ந்தபின் ஹோட்டலிலேயே super dinner. இத்தனை வித உணவுகளோடு டின்னர் சாப்பிட்டது எனக்கு அதுவே முதல் முறை.  சுட சுடக் கிடைத்த ஃபிலாஃபில் (நம்மூர் வடை போன்றது) ஒரு பிடி பிடித்தேன்.  சாப்பிட்டு சுகமாக வெப்பமூட்டப்பட்ட அறையில் ipod-ல் பழைய தமிழ் திரைப்படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்கிப்போனேம்.
--------------------தொடரும்

ஜோரான ஜோர்டன்-2 (பெட்ரா)

  
             ஹோட்டலிருந்து காரில் பெட்ராவை அடைந்தோம்.  எங்கள் டிரைவர் ஒரு லோக்கல் கைடை (guide) ஏற்பாடு செய்து கொடுத்தார்.  வழியில் கடைகளில் raincoat, mittens எல்லாம் விற்கிறார்கள்.  விலையை ஆளுக்கும், தேவைக்கும் ஏற்ப மாற்றுகிறார்கள்.  அதனால் அங்கு எது வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவது நல்லது.  நாங்கள் மூன்று raincoats வாங்கிக் கொண்டோம்.  என் அண்ணன் மட்டும் ஒரு டவல் வாங்கி லோக்கல் அரபிகளைப் போல் முகம், தலை எல்லாம் மூடிக் கொண்டு வந்தார்.  நல்ல வேளையாக சூரிய பகவான் கொஞ்சம் வெளியில் வந்து பெட்ராவை ரசிக்க எங்களுக்கு உதவினார்.



              முதலில் பெட்ராவைப் பற்றி சிறுகுறிப்பு.  முற்றிலும் பாறைகளே நிறைந்திருக்கும் இந்த இடத்தில் 2000 வருடங்களுக்கு முன்பே ஒரு அழகிய நகரை நிர்மாணித்து ஆட்சி செய்தது Nebataean இனத்தவர்கள்.  மழை காலத்தில் மட்டும் கிடைக்கும் நீரை சேமித்து விவசாயம் செய்யுமளவு புது தொழில் நுட்பங்களை அறிந்திருந்தனராம்.  அதுமட்டுமன்றி மழை காலத்தில் வரும் flash flood -ஐ சமாளிக்க அணைகளையும் கட்டியிருந்தது வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் பல காரணங்களால் முழுவதும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாக இருந்த இந்த இடத்தை Johann Ludwig Burckhard  என்ற சுவிஸ் நாட்டுக்காரர்தான் 1812-ல் மீண்டும் கண்டுபிடித்தாராம்.

              பெட்ரா என்றால் பாறை என்று பொருளாம்.  பெயருக்கேற்ப நகரம் முழுதும் பிரும்மாண்டமான பாறைகள் நிறைந்திருக்கின்றன.  நுழைவாயில் இருக்கும் இடம் bab as siq எனப்படுகிறது. இங்கிருந்து பெட்ராவின் முக்கிய இடங்களுக்குச் செல்ல ஒட்டகம், குதிரை மற்றும் குதிரை வண்டிகள் கிடைக்கின்றன.  ஆனாலும் நடந்து சென்றால்தான் அதன் அழகை ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே செல்ல வசதியாக இருக்கும்.  இங்கு 15-20 மீ உயரத்திற்கு நிறைய வெள்ளை பாறைகளில் tombs இருக்கின்றன.



            நிறைய ஆடுகளையும் ஆடு மேய்பவர்களையும் வழி நெடுக பார்க்க முடிகிறது.  கொஞ்ச தொலைவிலேயே பாறைகளின் நிறம் சிவப்பு, பழுப்பாக மாறுகின்றது.  இந்த இடத்தை Siq என்று அழைக்கிறார்கள். இங்கு 30 -40மீ வரை உயரமாக இருக்கின்றன.  பிரும்மாண்டமான இந்த பாறைகளும் அதில் தோன்றும் விதவிதமான வண்ண வேறுபாடுகளும்(ரோஸ், பழுப்பு, கருப்பு) பிரமிப்பூட்டுவதாக இருகின்றன. பெட்ராவை இதனால் rosered city என்று அழைக்கிறார்கள்.

 


இங்கும் அதிகமாக tombs தான் இருக்கின்றன.  கடுமையான மழை மற்றும் நில அதிர்வுகளால் இந்த பாறைகளில் இயற்கை பல சித்திரம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்திருக்கிறது.  அவைகள் மனிதனால் கொஞ்சம் highlight பட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.  இந்த புகைப்படத்தில் ஒரு  ஒரு கோணத்தில் மீன் போன்றும் இன்னொரு கோணத்தில் யானையின்  தலை போலும் தோன்றுவதைக் காணலாம்.

iiiiiii 


----------------------------------------------------தொடரும்

Saturday, 6 March 2010

ஜோரான ஜோர்டன்-1


              ஏன் எழுதவில்லை என்று நேரிலும், இமெயிலிலும், ஃபோனிலும் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி.  நம் வாசகர்களெல்லாம் silent spectators -ஆகவே இருப்பதால் இந்த மாதிரி இடைவெளிவிட்டால்தான் வாசகர்கள் ரெகுலராக படிப்பதே தெரிகிறது!!!!.

              சிறுவயதில் ஆனந்த விகடனில் மணியன் அவர்களின் பயணக் கட்டுரைகளைப் படிக்கும்போது நாமும் இதுபோல் பல இடங்களுக்குப் போய் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பின்னர் கனடாவில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தபோதும் அதைப் பற்றி எழுதும் வாய்ப்பு கிட்டவில்லை.  இப்போதுதான் இரண்டும் ஒன்றாய் அமைந்திருக்கிறது (ஆஹா, விட்டேனா பார்!!). சென்ற மாதக் கடைசியில் குவைத்தில் நேஷனல் டே, லிபரேஷன் டே மற்றும் வார இறுதி விடுமுறை எல்லாம் சேர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது.  அதனால் ஜோர்டன் நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.

              ஜோர்டன் நாடு இஸ்ரேல், சிரியா, இராக் மற்றும் சௌதி அரேபியாவால் சூழப்பட்டு உள்ளது.  இந்த geographical location-ஐ பார்த்தவுடனே பலர் (என் அண்ணன் உள்பட) 'எதுக்குடா வம்பு?' என்று ஒதுங்க நினைக்கிறார்கள்.  ஆனால் ஜோர்டன் மிகவும் பாதுகாப்பான இடமாகவே தோன்றுகிறது.  இயற்கை அழகு மட்டும் அன்றி இயற்கையே ஓவியமும் சிற்பங்களும் செதுக்கிய பெட்றா(Petra) நகரமும் வாடிரம்(WadiRum) போன்ற இடங்கள் இருந்தும் ஜோர்டன் அதிக விளம்பரம் பெறவில்லை என்றே தோன்றுகிறது.  ஒன்றும் அதிக இயற்கை அழகு இல்லாத நாடுகளெல்லாம் 'பூலோக சொர்கமே இதுதான்' என்று கூவி கூவி விளம்பரம் செய்யும்போது ஜோர்டன் கொஞ்சம்
Map of Jordan
அடக்கி வாசிப்பதாகவே தோன்றுகிறது.


              ஜோர்டன் சென்ற நண்பர்கள் அதன் அழகைப் பற்றி சொன்னதால் அங்கு செல்ல முடிவு செய்தோம்.  குவைத்தில் உள்ள ஒரு travel agent-ஐ அணுகி ஏற்பாடுகளை செய்ய நினைத்தோம்.  அவர்கள் quote செய்த விலை கொஞ்சம் அதிகமாகத் தோன்றியதால் இணையத்தில் அலசி ஒரு ஜோர்டன் tour agency- ஐத் தேர்ந்தெடுத்தோம். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டாலும், இன்னமும் இணைய கணக்கு வழக்குகளில் அதிகம் ஈடுபடாததால் சரியாக வருமா என்ற சின்ன ஐயம் இருந்துகொண்டே இருந்தது.  நாங்கள் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யும் முன் இணையத்தில் ஜோர்டனில் weather 14-16C இருக்கும் என்று போட்டிருந்தது.  பயண நாள் நெருங்கியவுடன் பார்த்தால் கடுமையான மழையும் பனிப்பொழிவும் இருக்கும் என்று போட்டிருந்தது.  அதனால் ஜோர்டன் பயணம் எப்படி இருக்குமோ என்ற கவலை கொஞ்சம் இருந்தாலும் மிக உற்சாகத்தோடு கிளம்பினோம்.   என் அண்ணனும் எங்களோடு வந்தது ஒரு கூடுதல் சந்தோஷம்.
              இரவு 9 மணிக்கு ஜசீரா விமானத்தில் ஏறி ஜோர்டனின் தலை நகர் அம்மானை இரவு 10.45-க்கு அடைந்தோம்.  நல்ல வேளையாக விமான நிலையத்தில் இறங்கியவுடனே ஜோர்டன் tour agency-யிலிருந்து ஒருவர் எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார்.  (அப்பாடா, முதல் கவலை நீங்கியது!!!). விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்து பார்த்தால், நல்ல மழை மற்றும் குளிர்.  காரில் 30 நிமிட பயணத்திற்குப் பிறகு ஜெனிவா ஹோட்டல் வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை உணவிற்குப் பின் பெட்ராவை நோக்கி காரில் சுமார் 4 மணி நேர பயணம் (அம்மானிலிருந்து 260 Km தூரம் ) .  வழி நெடுக மழையும் வெயிலும் மாறி மாறி இருந்ததால் பெட்ராவில் மழை எப்படியிருக்குமோ என்ற பயம் இருந்தது.  பெட்ராவிற்கு 1 கிலோ மீட்டருக்கு முன்பிருந்தே பனிப்படலம் புகைபோல் (fog) ஆரம்பித்துவிட்டது.  10 அடி தூரத்தில் இருப்பதுகூட தெரியவில்லை.  எங்கள் ஓட்டுனர் திறமையாக காரை ஓட்டிக்கொண்டு சென்றார். பெட்ரா செல்வதற்கு முன் வாடிமூசா என்ற நகரை அடைந்தோம்.  அங்கு மழை காரணமாக மின்சாரமே இல்லை. குளிரோ உறைய வைப்பதாக இருந்தது.  பேசாமல் ஹோட்டலுக்குச் சென்று ஓய்வு எடுப்போம் என்று நான் நினைத்தேன்.  என் ஆறு வயது மகளுக்கு இந்த குளிர் ஒத்துக் கொள்ளாதோ என்ற பயம்!!!.  பின்னர் என் கணவரின் அறிவுரைப்படி ஹோட்டலுக்குச் சென்று சட்டை மேல் சட்டை என்று 3 லேயர் ஆடைகளைப் போட்டு என் மகளைத் தயார் செய்தோம்.  எங்கும் fog -ஆக இருந்ததால் வடிவேலு சொல்வதைப் போல் 'பெட்ராவைப் பார்த்தோம் ஆனால் பார்க்கலை' என்ற கதையாகிவிடுமோ என்று தோன்றியது. என்ன ஆனாலும் சரி பெட்ராவிற்குப் போவது என்று முடிவு செய்து காரில் ஏறினோம்.
பெட்ராவின் அழகைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.