Saturday 6 March 2010

ஜோரான ஜோர்டன்-1


              ஏன் எழுதவில்லை என்று நேரிலும், இமெயிலிலும், ஃபோனிலும் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி.  நம் வாசகர்களெல்லாம் silent spectators -ஆகவே இருப்பதால் இந்த மாதிரி இடைவெளிவிட்டால்தான் வாசகர்கள் ரெகுலராக படிப்பதே தெரிகிறது!!!!.

              சிறுவயதில் ஆனந்த விகடனில் மணியன் அவர்களின் பயணக் கட்டுரைகளைப் படிக்கும்போது நாமும் இதுபோல் பல இடங்களுக்குப் போய் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பின்னர் கனடாவில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தபோதும் அதைப் பற்றி எழுதும் வாய்ப்பு கிட்டவில்லை.  இப்போதுதான் இரண்டும் ஒன்றாய் அமைந்திருக்கிறது (ஆஹா, விட்டேனா பார்!!). சென்ற மாதக் கடைசியில் குவைத்தில் நேஷனல் டே, லிபரேஷன் டே மற்றும் வார இறுதி விடுமுறை எல்லாம் சேர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது.  அதனால் ஜோர்டன் நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.

              ஜோர்டன் நாடு இஸ்ரேல், சிரியா, இராக் மற்றும் சௌதி அரேபியாவால் சூழப்பட்டு உள்ளது.  இந்த geographical location-ஐ பார்த்தவுடனே பலர் (என் அண்ணன் உள்பட) 'எதுக்குடா வம்பு?' என்று ஒதுங்க நினைக்கிறார்கள்.  ஆனால் ஜோர்டன் மிகவும் பாதுகாப்பான இடமாகவே தோன்றுகிறது.  இயற்கை அழகு மட்டும் அன்றி இயற்கையே ஓவியமும் சிற்பங்களும் செதுக்கிய பெட்றா(Petra) நகரமும் வாடிரம்(WadiRum) போன்ற இடங்கள் இருந்தும் ஜோர்டன் அதிக விளம்பரம் பெறவில்லை என்றே தோன்றுகிறது.  ஒன்றும் அதிக இயற்கை அழகு இல்லாத நாடுகளெல்லாம் 'பூலோக சொர்கமே இதுதான்' என்று கூவி கூவி விளம்பரம் செய்யும்போது ஜோர்டன் கொஞ்சம்
Map of Jordan
அடக்கி வாசிப்பதாகவே தோன்றுகிறது.


              ஜோர்டன் சென்ற நண்பர்கள் அதன் அழகைப் பற்றி சொன்னதால் அங்கு செல்ல முடிவு செய்தோம்.  குவைத்தில் உள்ள ஒரு travel agent-ஐ அணுகி ஏற்பாடுகளை செய்ய நினைத்தோம்.  அவர்கள் quote செய்த விலை கொஞ்சம் அதிகமாகத் தோன்றியதால் இணையத்தில் அலசி ஒரு ஜோர்டன் tour agency- ஐத் தேர்ந்தெடுத்தோம். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டாலும், இன்னமும் இணைய கணக்கு வழக்குகளில் அதிகம் ஈடுபடாததால் சரியாக வருமா என்ற சின்ன ஐயம் இருந்துகொண்டே இருந்தது.  நாங்கள் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யும் முன் இணையத்தில் ஜோர்டனில் weather 14-16C இருக்கும் என்று போட்டிருந்தது.  பயண நாள் நெருங்கியவுடன் பார்த்தால் கடுமையான மழையும் பனிப்பொழிவும் இருக்கும் என்று போட்டிருந்தது.  அதனால் ஜோர்டன் பயணம் எப்படி இருக்குமோ என்ற கவலை கொஞ்சம் இருந்தாலும் மிக உற்சாகத்தோடு கிளம்பினோம்.   என் அண்ணனும் எங்களோடு வந்தது ஒரு கூடுதல் சந்தோஷம்.
              இரவு 9 மணிக்கு ஜசீரா விமானத்தில் ஏறி ஜோர்டனின் தலை நகர் அம்மானை இரவு 10.45-க்கு அடைந்தோம்.  நல்ல வேளையாக விமான நிலையத்தில் இறங்கியவுடனே ஜோர்டன் tour agency-யிலிருந்து ஒருவர் எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார்.  (அப்பாடா, முதல் கவலை நீங்கியது!!!). விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்து பார்த்தால், நல்ல மழை மற்றும் குளிர்.  காரில் 30 நிமிட பயணத்திற்குப் பிறகு ஜெனிவா ஹோட்டல் வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை உணவிற்குப் பின் பெட்ராவை நோக்கி காரில் சுமார் 4 மணி நேர பயணம் (அம்மானிலிருந்து 260 Km தூரம் ) .  வழி நெடுக மழையும் வெயிலும் மாறி மாறி இருந்ததால் பெட்ராவில் மழை எப்படியிருக்குமோ என்ற பயம் இருந்தது.  பெட்ராவிற்கு 1 கிலோ மீட்டருக்கு முன்பிருந்தே பனிப்படலம் புகைபோல் (fog) ஆரம்பித்துவிட்டது.  10 அடி தூரத்தில் இருப்பதுகூட தெரியவில்லை.  எங்கள் ஓட்டுனர் திறமையாக காரை ஓட்டிக்கொண்டு சென்றார். பெட்ரா செல்வதற்கு முன் வாடிமூசா என்ற நகரை அடைந்தோம்.  அங்கு மழை காரணமாக மின்சாரமே இல்லை. குளிரோ உறைய வைப்பதாக இருந்தது.  பேசாமல் ஹோட்டலுக்குச் சென்று ஓய்வு எடுப்போம் என்று நான் நினைத்தேன்.  என் ஆறு வயது மகளுக்கு இந்த குளிர் ஒத்துக் கொள்ளாதோ என்ற பயம்!!!.  பின்னர் என் கணவரின் அறிவுரைப்படி ஹோட்டலுக்குச் சென்று சட்டை மேல் சட்டை என்று 3 லேயர் ஆடைகளைப் போட்டு என் மகளைத் தயார் செய்தோம்.  எங்கும் fog -ஆக இருந்ததால் வடிவேலு சொல்வதைப் போல் 'பெட்ராவைப் பார்த்தோம் ஆனால் பார்க்கலை' என்ற கதையாகிவிடுமோ என்று தோன்றியது. என்ன ஆனாலும் சரி பெட்ராவிற்குப் போவது என்று முடிவு செய்து காரில் ஏறினோம்.
பெட்ராவின் அழகைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments: