Monday 8 March 2010

ஜோரான ஜோர்டன்-3 (பெட்ரா)




              இப்படி அழகை ரசித்துக் கொண்டே ஏறக்குறைய 1.5 கி.மீ நடந்தால் திடீரென்று இரு பாறைகளுக்கு நடுவில் பெட்ராவின் முக்கியமான நினைவு சின்னம் treasury தெரிகிறது.  



இன்னும் கொஞ்சம் முன்னேறிச் சென்றால் முழுதுமாக வெளிப்படும் 40-45மீ உயரமுள்ள பாறையில் மனிதனால் செதுக்கப்பட்ட கட்டிடமான treasury-யின் பிரும்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.
 

               இதுவும் ஒரு கோவிலாகவோ அல்லது சமாதியாகவோ இருந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.  அங்கிருக்கும் லோக்கல் அரபு மக்கள் ( bedouins) இங்கு ஏதோ புதையல் இருக்கும் என்று எண்ணி இதை உடைக்கப் பல முயற்சிகள் செய்ததாகவும் தெரிகிறது.  புதையல் இருக்கும் என்று எண்ணி அவர்கள் treasury (al-khazana) என்றழைக்க அந்த பெயரே நிலைத்துவிட்டது.

               இந்த இடம் வரைதான் கீழிருந்து வந்த guides வருகிறார்கள்.  இதற்கு மேலே போகவேண்டுமென்றால் லோக்கல் மக்கள் நம்மை அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்கள். (அவர்களுக்குள் தொழில்முறை உடன்படிக்கை இருக்கும் என்று தோன்றுகிறது).  அவர்களுக்குத் தனியாக பணம் கொடுக்கவேண்டும்.  மேலே செல்ல ஒட்டகங்களும் இருக்கின்றன.  ஒட்டக சவாரி செய்ய என் அண்ணன் விரும்பியதால் என் கணவரும் அண்ணனும் ஒட்டகத்தில் ஏறி வர நானும் என் மகளும் ('எவ்வளவு தூரம் வேணும்னாலும் நடக்கிறேன்; ஒட்டகத்தில் ம்ட்டும் ஏறவே மாட்டேன்' என்றாள் என்   மகள்) நடந்து guide கூட நடந்தும் மேலே ஏறினோம்.  ஒட்டகத்தில் ஏறுவது கிட்டத்தட்ட amusement park-ல் ride-ல் செல்வதற்கு ஈடானது.   உட்கார்ந்திருக்கும் ஒட்டகத்தின் முதுகில் நாம் ஏறியதும் முதலில் பின்னங்கால்களைத் தூக்கும். அப்போது நாம் வேகமாக முன்னால் சாய்வோம்.  பின்னர் முன்னங்கால்களைத் தூக்கி எழுந்திருக்கும்.  அப்போது நாம் வேகமாக பின்னால் தள்ளப்பட்டு பின்னர் சம நிலைக்கு வருவோம்.  என் அண்ணனும் கணவரும் வீல் வீல் என்று கத்தி பின்னர் ஒட்டக சவாரியை ரசிக்கத் தொடங்கினர்.

 


             10 நிமிட நடைக்குப் பிறகு ரோமன் தியேட்டர் என்று சொல்லப்படும் இடத்தை அடைந்தோம்.  இதற்கு மேலும் பல மைல் தூரம் செல்லவும் பார்க்கவும் இடங்கள் இருக்கின்றனவாம்.  ஆனால் இடியும் மின்னலும் கடுமையாக வரவே நாங்கள் வேகமாக கீழே இறங்கினோம்.  நாங்கள் treasury -யை அடைவதற்குள் மழை வலுத்துவிட்டது.  பாறைகளின் நிழலில் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒதுங்க முற்பட்டோம். எங்கள் guide சமயோசிதமாக அங்கிருந்த ஒரே truck யை  (ஒட்டகங்களை ஏற்றிவர பயன்படுத்தியதாக இருக்கலாம்) ஏற்பாடு செய்து எங்களை ஏறுமாறு வற்புறுத்தினார்.  அவர் குரலிலும் செயலிலும் தெரிந்த பதற்றத்தைப் பார்த்து நாங்களும் வேகமாக ஏறிக்கொண்டோம்.  வரும் வழியில் மழை வலுக்கத் தொடங்கியது அல்லாமல் பனிமழையும் பெய்யத்தொடங்கியது.  ஒரு வழியாக கீழே வந்தடைந்தோம்.  இது போன்று 1960-களில் பெரு மழை வந்தபோது ஏற்பட்ட flash flood-ல் நிறைய சுற்றுலா பயணிகள் மாட்டிகொண்டு கஷ்ட்டப்பட்டதைத் தான் நேரில் பார்த்ததால்தான் இத்தனைப் பதற்றம் அடைந்ததாக எங்கள் guide சொன்னார்.  அவரின் சமயோசிதத்தைப் பாராட்டி வெகுமதி அளித்துவிட்டு எங்கள் காரில் ஏறினோம்.  வழியெங்கும் மழை நீர் ஆறு போல் ஓடி வந்துகொண்டிருந்தது.  லேசான பனிப் பொழிவும் ஆரம்பித்தது.  ஹோட்டலுக்குச் சென்ற சிறுது நேரத்தில் பனிமழை வலுத்தது.  படபடவென்று விழும் பனிமழையை எங்கள் மகள் மிகவும் ரசித்தாள்.
பனிமழை சிறிது ஓய்ந்தபின் ஹோட்டலிலேயே super dinner. இத்தனை வித உணவுகளோடு டின்னர் சாப்பிட்டது எனக்கு அதுவே முதல் முறை.  சுட சுடக் கிடைத்த ஃபிலாஃபில் (நம்மூர் வடை போன்றது) ஒரு பிடி பிடித்தேன்.  சாப்பிட்டு சுகமாக வெப்பமூட்டப்பட்ட அறையில் ipod-ல் பழைய தமிழ் திரைப்படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்கிப்போனேம்.
--------------------தொடரும்

2 comments:

meenakshi said...

மணியனின் பயணக் கட்டுரை 'இதயம் பேசுகிறது' வார இதழ்ல வந்துது இல்லையா? அப்போ அதை ரொம்ப சுவாரசியமா, தொடர்ந்து படிச்சேன். மணியன் அவர்களும் அருமையா எழுதி இருந்தார்.
நீயும் ரொம்ப அழகா எழுதி இருக்க. பாறை சித்திரங்களின் படங்கள் துல்லியமா, அழகா இருக்கு. படிக்கும்போதே அந்த இடங்களுக்கு போற ஒரு உணர்வு, படிக்கறவாளுக்கு வரணும். அதுதான் எழுதறவாளோட திறமை. உனக்கும் அந்த எழுத்து திறமை இருக்கு. வாழ்த்துக்கள்!
Your daughter is so cute! :)

geetha santhanam said...

thanks meenakshi for your comments about the post and my daughter. ---geedhu